சிவவாக்கியம் பாடல் 145 – ஈனெருமையின் கழத்தில்
145. ஈனெருமையின் கழத்தில் இட்ட பொட்டனங்கள் போல்,
மூனு நாலு சீலையில், முடிந்து, அவிழ்க்கும் மூடர்காள்.
மூனு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை,
ஊனி ஊனி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே!
சிவவாக்கியம் பாடல் 144 – ஓதி வைத்த
144. ஓதி வைத்த நூல்களும், உணர்ந்து கற்ற கல்வியும்,
மாது மக்கள் சுற்றமும், மறக்க வந்த நித்திரை,
ஏது புக்கொழித்ததோ? எங்கும் ஆகி நின்றதோ?
சோதி புக்கொழித்த மாயம் , சொல்லடா சுவாமியே!
சிவவாக்கியம் பாடல் 143 – உண்ட கல்லை
143. உண்ட கல்லை எச்சிலென்று , உள் எரிந்து போடுறீர்.
பண்டும் எச்சில் கையெல்லே, பரமனுக்கும் தேறுமோ!
தண்ட எச்சில் கேளடா ? கலந்த பாணி அப்பிலே !
கொண்ட சுத்தம் ஏதடா? குறிப்பில்லாத மூடரே!
சிவவாக்கியம் பாடல் 142 – உதிரமான பால்
142. உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும்,
இதரமாய் இருந்த தொன்று இரண்டு பட்ட தென்னலாம்,
மதரமாக விட்ட தேது மாங்கிசம் புலால் அதென்று,
சதுரமாய் வளர்ந்த தேது சைவரான மூடரே!
சிவவாக்கியம் பாடல் 141 – புலால் புலால்
141. புலால் புலால் புலால தென்று பேதமைகள் பேசுறீர்.
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே?
புலாலுமாய் பிதற்றுமாய் பேருளாவும் தானுமாய்,
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் கானும் அத்தனே!.
சிவவாக்கியம் பாடல் 139 – உருத்தரிப்பதற்கு முன்
139. உருத்தரிப்பதற்கு முன் உடன் கலந்ததெங்கனே?
கருத்தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்கனே?
பொருத்தி வைத்த போதமும் பொருந்துமாறு தெங்கனே?
குருத் துருத்தி வைத்த சொல் குறித்துனர்ந்து கொள்ளுமே !
சிவவாக்கியம் பாடல் 138 – அம்மை அப்பன்
138. அம்மை அப்பன் அப்பு நீ அறிந்ததே அறிகிலீர்.
அம்மை அப்பன் அப்பு நீ அரி அயன் அரனுமாய்,
அம்மை அப்பன் அப்பு நீ ஆதி ஆதி ஆன பின்.
அம்மை அப்பன் நின்னை அன்றி யாருமில்லை ஆனதே.
சிவவாக்கியம் பாடல் 137 – நாலிரண்டு மண்டலத்துள்
137. நாலிரண்டு மண்டலத்துள், நாதன் நின்றது எவ்விடம்?
காலிரண்டு மூல நாடி கண்டதிங்கு ருத்திரன்.
சேர் இரண்டு கண் கலந்து , திசைகள் எட்டும் மூடியே.
மேலிரண்டு தான் கலந்து வீசியாடி நின்றதே !
சிவவாக்கியம் பாடல் 136 – எட்டு மண்டலத்துலே!
136. எட்டு மண்டலத்துலே ! இரண்டு மண்டலம் வளைத்து,
இட்ட மண்டலத்திலே எண்ணி ஆறு மண்டலம்.
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம்.
நட்ட மண்டபத்திலே நாதன் ஆடி நின்றதே!
சிவவாக்கியம் பாடல் 135 – காலை மாலை
135. காலை மாலை நம்மிலே கலந்து நின்ற காலனார்.
மாலை காலையாய்ச் சிவந்த மாயமேது ? செப்பிடீர்.
காலை மாலை அற்று நீர் கருத்திலே ஒடுங்கினால்.
காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே!
சிவவாக்கியம் பாடல் 134 – நூறு கோடி
134. நூறு கோடி ஆகமங்கள் , நூறு கோடி மந்திரம்.
நூறு கோடி நாளிருந்து , ஒதினாலும் என் பயன் ?
ஆறும் ஆறும் ஆறுமாய் , அகத்தில் ஓர் எழுத்துமாய்,
ஏறுசீர் எழுத்தை ஓத , ஈசன் வந்து பேசுமே!.
சிவவாக்கியம் பாடல் 133 – சித்தர் ஓதும்
133. சித்தர் ஓதும் வேதமும், சிறந்த ஆகமங்களும்,
நட்ட காரணங்களும், நவின்ற மெய்மை நூல்களும்,
கட்டி வைத்த போதகம் , கதைக்குகந்த வித்தெலாம்.
பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்த பின்.